Wednesday, November 11, 2020

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதிய 'நட்சத்திரம்' சிறுவர் பாடல்கள் நூல் பற்றிய ஒரு விவரணப் பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் கிண்ணியா - 07

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதிய 'நட்சத்திரம்' சிறுவர் பாடல்கள் நூல் பற்றிய ஒரு விவரணப் பார்வை

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா ஈழத்து இலக்கிய முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் முன்னிலை வகிக்கின்ற ஒருவர். 2004 ஆம் ஆண்டு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற கவிதையை எழுதியதன் மூலமாக இலக்கிய உலகுக்குள் பிரவேசித்தார்.

இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் என எழுதி இலக்கியத்தில் தனது இருப்பைக் காத்திரமாக்கிக் கொண்டு தொடர்ந்தும் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பதோடு, ஏனையவர்களுக்கும் தன்னாலான உதவிகள் செய்து அதன் மூலம் மன நிறைவடைகின்றார். 

இலங்கையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகையான 'பூங்காவனம்' இவரது பெயரை என்றைக்குமே சொல்லிக் கொண்டிருக்கும். படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுடன் இணைந்து உடன் பிறவா சகோதரிகளாக, உற்ற நண்பிகளாக வாழ்ந்து பூங்காவனம் உதவி ஆசிரியர் என்ற வரையறைக்குளிருந்து இவர் ஆற்றிய இலக்கியப் பணி மகத்தானது.

எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் இவர், தான் எதிர்கொண்ட பல்வேறு எழுத்துலக சவால்களை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை என்பவற்றால் வெற்றிகொண்ட ரிஸ்னா இலங்கை கல்வி அமைச்சின் பாட நூல் வெளியீட்டுப் பிரிவில் கணினி வடிவமைப்பாளராக பல வருடங்கள் பணிபுரிந்து, தனது இலக்கிய ஆற்றலின் மூலம் அதற்கு சிறப்பளித்தார்.

எச்.எப். ரிஸ்னா, இதுவரை 10 நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார். இவற்றில் இன்னும் உன் குரல் கேட்கிறது, மெல்லிசைத் தூறல்கள் போன்ற நூல்கள், இவருக்கு நாடு தழுவிய ரீதியில் பெரும் வரவேற்பினையும் பிரபல்யத்தினையும் பெற்றுக் கொடுத்தது. இவர் எழுதிய பாடல்களில், நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த, "மக்காவில் பிறந்த மாணிக்கமே எம் நபியே" என்ற பாடல் கலைக்கமல் அவர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டமை இங்கு ஈண்று குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பல்வேறு இலக்கிய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தற்போது சிறுவர் படைப்புகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி 'நட்சத்திரம்' என்ற சிறுவர் பாடல் நூலை எமக்குத் தந்துள்ளார் ரிஸ்னா. 15 பாடல்கள் அடங்கியிருக்கும் இந்நூல் கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தகுதிச் சான்றிதழையும் பெற்றுள்ளது. இது இவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அரச அங்கீகாரமாகும்.

குறிஞ்சி நிலா எனும் புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார் எச்.எப். ரிஸ்னா. தனது படைப்பாற்றலுக்காக இவருக்கு இதுவரை கிடைத்துள்ள விருதுகளாவன:-

• 2013 அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது)
• 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது
• 2016 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது
• 2018 பாணந்துறை இஸ்லாமிய பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி விருது

சிறுவர்களின் வாசிப்புத் திறன் விருத்தியை மேலோங்கச் செய்து, அவர்களது உள மகிழ்வினையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவர் எழுதியுள்ள இந்நூல் நிச்சயம் பலரது பாராட்டினைப் பெற்றுக் கொள்ளும் என்பது திண்ணம்.

அழகிய அட்டைப் படத்துடன் 28 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நூலில் 15 பாடல்கள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. இப்பாடல்கள் ஒவ்வொன்றும் சிறுவர் மனதைக் கவரும் நோக்கில் படைக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இந்நூல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கான அணிந்துரை, பின்னட்டைக் குறிப்பு என்பவற்றை மாவனல்லையைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் அவர்கள் வழங்கியுள்ளார்.

இனிப் பாடல்களின் விவரணத்தைப் பார்ப்போம்.

பக்கம் 09, பாடல் - 1

மழை பொழியுது

மழை பொழிகின்ற அழகு ஆறுகள் பெருகி ஓடுவதை காணுகின்ற ஆனந்தம் கார்முகில் பனிந்து நீர் கொட்டிட நீர் நிலைகள் அடைகின்ற நீர்ப்பெருக்கம் என இப்படியே இயற்கையின் அழகு அற்புதமாக சொல்லப்படுதில் சிறுவர்கள் நிச்சயம் இன்புறுவர், சந்தோஷமடைவர்.

மழை பொழியுது பொழியுது
கார்முகில் கொட்டுது கொட்டுது

மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
அருவிகள் வழிந்திட
ஆனந்தம் பெருகிட

மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
நீர் நிலை உயர்ந்திட
நிலங்கள் நனைந்திட

பக்கம் 12, பாடல் - 03

பழங்கள்

பழங்கள் உண்பதின் அவசியம் அதனால் பெறப்படுகின்ற ஊட்டச் சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அவற்றின் பங்களிப்பு, கழுவி உண்ணுவதின் சிறப்பு என்பன இப்பாடலில் மிக அழகாக சித்தரித்துக் கூறப்பட்டுள்ளது.

பழங்கள் உண்ணும் பழக்கத்தை
பாலர் நாமும் பழகிடுவோம்
உடல் ஆரோக்கியம் பெற்றிடவே
உண்டுவ ருவோம் பழங்களையே

பழத்தில் உள்ள விற்றின்கள்
விரைவில் உடலில் சேர்ந்திடவே
மென்று உண்போம் பழங்களையே
மெல்ல உண்போம் பழங்களையே

பக்கம் 17, பாடல் - 06

காக்கையாரே

'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என்ற சிறப்புமிகு பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள், கதைகளில் காகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் காகத்தின் பங்களிப்பும், காத்திரமான அளவு இருப்பதைப் பலரும் நன்கு அறிவர். அந்தவகையில் எச்.எப். ரிஸ்னாவும் காகம் பற்றிப் பாடுகின்றார்.

காக்கையாரே காக்கையாரே
கருமை நிற காக்கையாரே
கடுமையாக யோசிக்கும்
காரணத்தை சொல்வாயோ?

தெருவோர கடைப் பக்கம்
ஆலமரம் நிற்கிறதே
அதோ பார் அதன் நிழலில்
பாட்டி வடை சுடுகின்றாள்

பக்கம் 27, பாடல் - 14

வயல்வெளி

உலகின் உணவு உற்பத்தித் தளமான வயல்வெளி பற்றியும் அதன் சிறப்புக்கள், மேன்மை பற்றியும் மிக அழகாக தனது பாடல் மூலம் எடுத்துரைத்துள்ளார் இந்த நூலாசிரியை.

ஆற்றங்கரை மேட்டினிலே
அழகழகாய் வயல்களம்மா
அதிகாலை வேளையிலே
அணியணியாய் தெரியுதம்மா

அன்னப் பறவை கூட்டங்கள் போல்
ஆனந்தமாக ஓடி வரும்
கன்னிப் பெண்கள் கூட்டத்திலே
கலர் கலராக ஆடையம்மா

நட்சத்திரம் என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள 15 பாடல்கள் மூலமாகவும் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, அவர்களது கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பினை நல்குவதற்காக எச்.எப். ரிஸ்னா எடுத்துக் கொண்டுள்ள முற்சியில் அவர் வெற்றி கண்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

நூலின் பெயர்           - நட்சத்திரம்
நூலாசிரியர்              - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு                    - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை                            - 200 ரூபாய்
தொலைபேசி இல  - 
0775009222, 0719200580


நூல் விவரணம்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
#கிண்ணியா - 07.

03. மழையில் நனையும் மனசு - கே.எஸ். சிவகுமாரன்

எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிதமாய் பேசும் கவினூறு கவிதைகள்

கே.எஸ். சிவகுமாரன்

பதுளை மாகாணத்தில், அந்நகரிலிருந்து சில மைல் தூரத்தில் தியத்தலாவை என்ற குளிர் பிரதேசம் இருக்கிறது. சிறுவயதில் எனது உறவினர் ஒருவர், அங்குள்ள நில அளவைப் பயிற்சியாளர்கள் முகாமில் தங்கியிருந்தார். பாடசாலை விடுமுறையில் என் பெற்றோர், தம்பிமார் சகிதம் நாம் அங்கு சென்றிருந்தோம். அந்த அனுபவம் அலாதியானது. தியத்தலாவையிலிருந்து திறமைசாலி இளம் எழுத்தாளர் ஒருவர் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். பத்து நூல்களை இதுவரை தந்துள்ள அவர் பெயர் எச்.எப். ரிஸ்னா. இவருடைய முன்னைய நூலொன்றை நான் திறனாய்வு செய்தது நினைவிற்கு வந்தது.

இவரது சமீபத்திய நூல், ஒரு கவிதை நூல். மழைப் பிரதேசமான அவ்விடத்திலிருந்து எழுதும் ரிஸ்னா "மழையில் நனையும் மனசு" என்ற தலைப்பில் அந்த நூல் வெளியாக்கியிருக்கிறார். "மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு" சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த அழகான நூலில் மொத்தம் 78 கவிதைகள் இடம் பெறுகின்றன. 

இந்நூல் வெளியிடப்பட்டபோது அங்கு பேசிய அறிஞர்கள் இந்நூலின் சிறப்புகளை விதந்துரைத்தனர். அவை நூலாசிரியருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். இவரது இக்கவிதைகளின் உள்ளடக்கம் தொடர்பாகவே பலரும் தமது கருத்துக்களை மையமாக வைத்துப் பேசினர். என்னைப் பொறுத்தமட்டில் உள்ளடக்கம் தொடர்பாக நம்மிடையே பலர் வியாக்கியானங்களைச் செய்ய இருக்கின்றனர். எனவே தான், உள்ளடக்கம் ஆசிரியரின் சொந்தப் பார்வையானதால், அதுபற்றி நான் தட்டிக் கேட்பதில்லை. நான் முதலில் ஒரு ரசிகன் மாத்திரமே. கண்டனம் செய்யும் விமர்சகன் அல்லன். மாறாக, படைப்பின் திறன்களை எனது ரசனையின் அடிப்படையில் சுட்டிக்காட்டுவதே எனது தொழிற்பாடு. அதன்படி ரிஸ்னாவின் கவிதைகளில் காணப்படும் புத்தாக்கங்களையும், கவித்துவம் நிரம்பிய வரிகளையும் வியந்து பாராட்டவே முயல்கின்றேன்.

கல்கிசையிலிருந்து வெளியாகும். "பூங்காவனம்" சிற்றேட்டினரின் இலக்கிய வட்டம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ 400/=. இதில் சில கவிதைகளுக்கு மனதைக் கவரும் சில சித்திரங்களும் இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், எம்.எஸ்.எம். ஜின்னா, வி. ஜீவகுமாரன் ஆகியோருடன் எச்.எப். ரிஸ்னாவும், இக்கவிதைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அழகாக விபரித்துள்ளனர். இவற்றை நான் மீண்டும் எடுத்துரைப்பதை விடுத்து, கவிதைகளில் காணப்படும் புதுமைப் பிரயோகங்களை மாத்திரம் இங்கு பதிவு செய்கிறேன்.

அதற்கு முன்னர், இவருடையதும், இவரின் ஊக்குவிப்பியாக இயங்கும் ரிம்ஸா முஹம்மத்தினதுமான இரு கவிதைகளை நான் ஆங்கிலத்தில் ஆக்கம் செய்துள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ரிஸ்னாவின் நோக்கம்: அழகான கவிதையை எழுதிவிட நல்ல கற்பனை வளம் இருந்தால் போதும். ஆனால் ஆத்மார்த்தமான கவிதைகளை எழுதுவதற்கு நமதோ, நம்மைச் சார்ந்தவர்களின் வலிகளும் போராட்டங்களும் தான் பாடு பொருளாகின்றன. அழகியல், ஆத்மார்த்தம் ஆகிய இருவகை சார்ந்த கவிதைகள் இந்நூலில் உள்ளடங்கியிருக்கின்றன.

இனி, நான் ரசித்த வரிகளுள் சில:-

* மலைகள் பெயர்ந்து இடம்மாறி மண்சரிவாகி நின்றதம்மா

* அதிகாலை வந்து என் மனசில சங்கமமான பனித்துளிக்கு

* உள்ளத்தின் உறுத்தல்கள் என்ற கவிதை அழகிய காதற் கவிதை

* இரும்புருக்கி ஊற்றியது போல இதயத்தில் வலியெடுக்கிறது

* வாடிப்போன என் இளமையே 

* நெருப்புக் கட்டைக்குள் ஓடிப் புகுந்து தீக்குளிக்கும் என் இளமை

* குளிர் பூசும் கால நிலை

* கலாய்த்த உறவுகள்

* கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி

* வார்த்தைகளால் கத்தி செய்து துன்புறுத்துபவன் இருக்கிறான்

* உன் வார்த்தைகளின் சுனாமியினால்

* இனமொன்றை துடைத்தழித்தால் அதற்குப் பெயர் வன்மம் தான்

* பூச்சரித்த அரிசி தின்று வயிற்றுளைவால் துடித்திருந்தோம்

* இதயத் தணலில் மேலெழும் சில நினைவுப் புகை என்னில் படிந்து கொள்கிறது

* கற்கண்டை சாப்பிட்டாற் போல காதல் சொற்கொண்டு நீ பேசுகையில் ஆனந்த அருவி வந்து பாய்கிறது என் உள்ளத்தில்

* என் ஞாபகப் புற்களில் அமர்ந்து கொண்ட பனித்துளியா அவன்

* இதயத்தின் கீதங்களை மொழிபெயர்ப்பு செய்த வீணையா அவன்

* என் மனசை மெதுவாய் கொத்தும் கோழிக் குஞ்சா அவன்

* அடை மழையில் வரைந்த ரங்கோலியாகத் தான் அது

* நேசத்தின் ஒலிகள்

* குளவி கொட்டிப்போன வேதனையின் சாயலிலும் பாலைவன மணலின் தாங்கவியலா கொதிப்பிலும் துயரங்களை தருவிக்கிறது இருதயம்

* ஐஸ்கிறீம் கூட வெந்நீராய் சுட்டது

* சிற்பமாய் நீ எனக்குள்

* காய்ந்திருந்த இதயத்தில் மழை தூறிப் போயிற்று

* உப்பு அதிகரித்த உணவுக்குள் உடனே நீர்விட்டு அருந்திய பாசம்

* நெருப்புக்கு நாமின்று விறகானோம்

* உன் மனமெனும் மீனை கௌவிக் கொள்வதற்காய் நதிக்கரை கொக்காக நானும்

* மரக்கொத்தியாய் நீ என்னை கொத்திவிட வேண்டும் என்பதற்காய் என் உள்ளத்தை வாழை மரமாய் ஆக்கியிருக்கின்றேன்

* உன் இறால் இதழை உடனே பத்திரப்படுத்து


எச்.எப். ரிஸ்னா கவிஞர் மாத்திரமல்லர். நல்ல திறனாய்வாளரும் கூட. மேலும் பல காத்திரமான தொகுதிகளை இலக்கிய உலகுக்கு இவர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்!!!


நூல்                        - மழையில் நனையும் மனசு

நூலின் வகை      - கவிதை 

நூலாசிரியர்        - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

தொலைபேசி       - 0775009222

வெளியீடு            - பூங்காவனம் பதிப்பகம்

விலை                    - 400 ரூபாய்





02. "மழையில் நனையும் மனசு" கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

"மழையில் நனையும் மனசு" கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


"மழையில் நனையும் மனசு" என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.

ஷஷமழையில் நனையும் மனசு|| என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது நூலாகும். 78 கவிதைகளை உள்ளடக்கியதாக 120 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை பூங்காவனம் இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்), மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) ஆகிய நூல்களை ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"மழையில் நனையும் மனசு" என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் "ஊவாவின் கவிதை இலக்கிய வரலாற்றில் ரிஸ்னாவுடைய கவிதைகளும் நிச்சயம் ஆராயப்படும். இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் இந்நூலாசிரியர் பல பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை நிறைவு செய்துள்ள இவர் பல இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார். ஒரு சிறந்த கவிஞன் என்பவன் தக்க சொல்லை, தக்க இடத்தில், தக்கவாறு கையாள்பவன் என்றும் - சிறந்த கவிதை என்பது நல்ல சொற்கள், நல்ல ஒழுங்கில் அமைவது என்றும் கொள்ளலாம். இக்கவிஞரின் கவிதைகளில் இப்பண்புகளைத் தொடர்ந்து காணலாம் என்பதற்கு 78 இற்கும் மேற்பட்ட கவிதைகளில் பல உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. கவிதைக்காகக் கற்பனையில் ஆழ்ந்துவிடாமல் தன்னைச் சூழ உள்ள சமூகம், அதில் வாழும் மனிதர்கள்.. இவற்றையே பொருளாகக் கொண்டு தனது கவிதா ஆற்றலைச் சிறப்புறக் காட்டியுள்ள நூலாசிரியரின் இந்நூல், சகல தமிழ் பேசும் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் நிச்சயம் பெறும்." என்று கூறியுள்ளார்.

அதுபோல இந்த நூலுக்கு நயவுரை வழங்கியுள்ள முன்னாள் அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூஷணம்  நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இலக்கியத் தடத்தில் கால்பதித்து அதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இளையவர்களில் முக்கியமான ஒருவராகவே தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவை நான் பார்க்கிறேன். ஒருசில கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்து போவோர்களாய் பல இளையவர்கள் இருக்கையிலே தான் சார்ந்த இலக்கியத் துறையில் ஒரு திடமான தடத்தைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் நிறையவே காணப்படுவதை நான் அறிவேன். இலக்கியத் துறையிலுள்ள மூத்தோருடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, அவர்களை அணுகும் முறை என்பனவுடன், இளையவர்களுடன் இருக்கும் சுமுக உறவு போன்றன இத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் ரிஸ்னாவை ஈடுபட வைக்கிறது என்று சொன்னால் அது பிழையல்ல. ஏறக்குறைய இலங்கையின் எல்லா பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது பதிவினைச் செய்துள்ள எச்.எப். ரிஸ்னா, கடல் கடந்தும் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். அவருக்கென்றே பல பிரத்தியேக அழகான வலைப்பதிவுகள் சர்வதேசமெங்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருக்கும் தேடல் முயற்சிகள் அவரை பண்படுத்திக் கொண்டிருக்கின்றன."

கருத்துரை வழங்கியுள்ள சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்கள் "எழுத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்புகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். எழுத்தின் சமூக பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா உன்னதமான நோக்கங்கள் நிறைந்தவராகக் காணக்கூடியதாய் உள்ளார். இவரது உறைப்பான வார்த்தைககள், உபதேசங்கள், போதனை கல்வி போன்றன நிச்சயம் சமுதாயத் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன. நெருப்பு வாழ்க்கை, இதயமும் பழஞ்செருப்பும், பெரிய புள்ள, போலி மனிதர்கள், சீதனம் தின்னும் கழுகுகள், ஏழைத் தாய் போன்ற கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துச் செறிந்த அவரது உன்னத எழுத்துக்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கிறது எனலாம்"| என்று ரிஸ்னாவின் கவிதைகள் பற்றி சிலாகித்துள்ளார்.

'மழைக் குளிரில் தளிர் பறிக்கு;கும் மலையக மாதருக்கு இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இந்த நூலில் உள்ள 78 கவிதைகளில் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம். 

சீற்றம் (பக்கம் 21) என்ற கவிதை வெள்ள அனர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அந்த அனர்த்தம் மனிதனுக்குப் புகட்டக்கூடிய பாடங்களையும் இக்கவிதை கற்பிக்கின்றது. எமனைப் போல மழை பெய்து அதனால் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் அழிந்துவிட்டதாகக் கூறும் நூலாசிரியர் அவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட வீடுகளுக்குள் சென்று திருடுவோரையும் இக்கவிதையில் சாடியிருப்பது அவ்வாறு நடப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்துள்ளது. 


கொல்லும் எமனாய் வானவெளி

துன்ப மழையைப் பொழிந்ததம்மா

சேர்த்து வைத்த சொத்தெல்லாம்

பார்த்திருக்க அழிந்ததம்மா!


வெள்ளம் என்ற சொல் கேட்டு

உள்ளம் தீயாய் எரிந்ததம்மா

கனவில் பூக்கும் தோட்டத்தில்

கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!


கூரை வரையும் நீர் வந்து

பதறச் செய்து வதைத்ததம்மா

ஓடி ஒழிய வழிகளின்றி

பின்னால் வந்து உதைத்ததம்மா!


எனது ஊரும் தலைநகரும் (பக்கம் 43) கவிதை சொந்த ஊரின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதோடு, தலைநகரில் செயற்கை வாழ்க்கை வாழுகின்ற மனக்கிலேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. சொந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு தலைநகரம் அபயமளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றதென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மன வாட்டத்தைக் கொடுப்பதும் உண்மையே. காரணம் வீட்டைவிட்டு தொழிலுக்காக, படிப்புக்காக என்று தலைநகரில் வெந்தேறு குடிகள்தான் அதிகம். அவ்வாறு காலச்ச சக்கரத்தின் காய் நகர்த்தலுக்கு ஆட்பட்டு வந்தவர்களின் மனவோட்டத்தை, ஊர் பற்றிய பிரக்ஞையை இக்கவிதை மூலம் நன்கு உணரலாம். 

 

அங்கு...

நான் ஓடித் திரிந்த மேட்டுநிலம்..

குளிர் பூசும் காலநிலை..

பசுமைமிகு பச்சை மரம்..

அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!

மொட்டை மாடியமர்ந்து

கிறுக்கிய கவிதை..

மரத்தடி நிழலின் ஈரலிப்பு..

பலாப் பழத்தின் வாசனை..

என் சமையலை ருசித்தவாறே

கலாய்த்த உறவுகள்..

அன்பின் உம்மா வாப்பா..

செல்லத் தங்கை.. சுட்டித் தம்பி!!!


இங்கு...

சுட்டெரிக்கும் சூரியன்..

பச்சையம் மறந்த பொட்டல் வெளி..

ஜீவிதம் கசக்கும் விடியல்கள்..

வாகனங்களின் தொடர் இரைச்சல்!

மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..

கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி..

நெருப்பு விலையாய் சாமான்கள்..

சுனாமி தந்த கடல் அல்லது கரை

செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!


லயத்து வீடும் கரத்தை மாடும் (பக்கம் 66) என்ற கவிதை காலாகாலமாக மலையக மக்கள் படுகின்ற துயரத்தை பிரதிபலிக்கின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்பவர்கள் மழை வெயில் பாராது, கஷ்டப்படுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு 'லயத்துக் காம்பறா' என்று சொல்லப்படும் சிறு அறையில் காலங்காலமாக பல தலைமுறைகள் வாழ்ந்து வருகின்றார்கள். வாக்குகள் கேட்டு காலடி தேடிப் போகும் அரசியல்வாதிகள் கூட, அம்மக்களின் பிரச்சிகைளைத் தீர்த்து வைக்கப் பாடுபடுவதில்லை. ரொட்டியும் சம்பலும், தேயிலைச் சாயமும்தான் அவர்களது உணவு. இந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையை இக்கவிதை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றமை சிறப்பும்சமாகும்.


கொழுந்த நாம பறிச்சு பறிச்சே

கையி காலு முறிஞ்சி போச்சி

தேங்கா மாவு குதிர வெல

ஒழக்கிறதும் எரிச்சலாச்சு!


சப்பாத்து இன்றி போனதால

புள்ள படிப்பு பாழாப் போச்சி

பட்டணம் போன மூத்தவனின்

சம்பளமும் கொறஞ்சி போச்சி!


மானியம், கடனுதவி

அர்த்தமெல்லாம் பிழச்சிப் போச்சி

வாழையடி வாழையாக

கஷ்டங்களே நிலைச்சிப் போச்சி!


நம்பிப் போட்டோம் வாக்குகள

எல்லாமே மோசம் போச்சி

தொரேமாரின் வேஷம் எல்லாம்

நல்லாவே வெளுத்துப் போச்சி!


லயத்து வீடும் கரத்தை மாடும்

எங்களுடைய சொத்தாப் போச்சி

மாடி வீடும், மஹத்தியா பட்டமும்

அவங்களோட நெலச்சிப் போச்சி!


குடிக்கலாம்னு பாத்தோமே

கொஞ்சமாவது கஞ்சி வச்சி

கூரை ஓட்டை தண்ணி வந்து

அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!


இளம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராக எச்.எப். ரிஸ்னாவைச் சொல்லலலாம். இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிளும் காலூன்றி வெற்றி பெறக்கூடிய திறமை இவருக்கு நிறையவே இருக்கின்றது. இவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சந்தக் கவிதைகளில் மனம் லயிக்கச் செய்யும் எழுத்தாற்றல் கைவரப் பெற்ற இவரது இலக்கியப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்!!!


நூல் - மழையில் நனையும் மனசு 

நூலின் வகை - கவிதை

நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

தொலைபேசி - 0775009222, 0719200580

மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com  

விலை - 400 ரூபாய்