Saturday, February 16, 2019

01. ''மழையில் நனையும் மனசு'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம் - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா – 07

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ''மழையில் நனையும் மனசு'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா – 07

இலங்கையின் இலக்கிய வரலாற்றில் தற்போது முன்னொரு போதும் இல்லாத அளவில் பெண் படைப்பாளிகளின் வரவு அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், ஊடகம் என இவர்களது ஆளுமை பரந்துபட்டு செல்வதைக் காணுகையில் மனசுக்குள் ஒரு மழைத் தூறல் பொழிந்து கொண்டிருக்கின்றது.

பரந்து விரிந்து நிற்கும் இலக்கிய உலகு இவர்களது வரவினால் மகிழ்ச்சிப் பூக்களைப் புஷ்பித்து சந்தோஷம் அடைவதோடு அவர்களுக்காக தன் மடியில் இடமும் கொடுத்து கௌரவப்படுத்துவதில் புதிய அத்தியாயங்கள் தோற்றம் பெற வழிவகுக்கின்றன.

எண்ணக் கருக்களுக்கு இலக்கிய வடிவம் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்து நிற்கும் பெண் படைப்பாளிகளின் வரிசையில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மிக முக்கியமான இடத்தினை வகிக்கிறார். கல்வி வெளியீட்டுத் திணைக்கள்ததில் பணியாற்றும் இவர் கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், சிறுவர் இலக்கியர், ஊடகவியலாளர் என பன்முக ஆளமைகளைக் கொண்டுள்ளார். தனது திறமையின் நிமித்தம் கிராமிய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். அவரது இலக்கிய இலக்கினை நோக்கிய பயணத்தில் கனிசமான வெற்றியும் அடைந்துள்ள இவர் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளதுடன் பூங்காவணம் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்து ஆற்றுகின்ற இலக்கிய பணி மகத்தானதாகும். இவ்வாறான சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ள எச்.எப். ரிஸ்னா, ''மழையில் நனையும் மனசு'' எனும் நாமம் தாங்கிய கவிதை நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். கண் கவரும் அழகிய அட்டைப் படத்துடன் கூடிய கைக்கடக்கமான இந்நூல் 78 கவிதைகளை உள்ளடக்கி 120 பக்கங்களில் பூங்காவனம் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்துள்ளது.

இந்நூலுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் (ஓய்வுநிலை) அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர் தனது உரையில் ''சிறப்பு வாய்ந்த கவிதை அடிகளை இனங்கண்டு இவ்விடத்தில் பட்டியல் இடுவதைவிட வாசகர்களே அவற்றை இனங்காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கவிதையின் உருவமா, உள்ளடக்கமா முக்கியத்துவம் வாய்ந்தது? என்ற வினாவானது நீண்ட காலமாக இருந்து வருகின்றது. கவிஞன் பாடும் பொருளினாலன்றி வகையினாலேயே சிறப்புப் பெறுகின்றான் என்று உருவத்தைப் பெரிதும் மதிப்போர் உள்ளனர். அவ்வாறே உள்ளடக்கத்தின் சிறப்புப் பற்றி பேசுவோரும் உள்ளனர். இக்கவிதை நூலில் கவிதாயினி எச்.எப். ரிஸ்னா இவ்விரு சிறப்புகளுக்கும் சமனான முக்கியத்துவம் வழங்கியுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளது நூலின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் நயவுரையை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் மிக அழகாக நயம்பட நவின்றுள்ளதோடு பின்னட்டைக் குறிப்பினை இலங்கையின் காத்திரமான பெண் படைப்பாளியும், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியையுமான வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்கியுள்ளார். இவர் ரிஸ்னா பற்றிக் குறிப்பிடுகையில் ஷஷகவிதாயினி எச்.எப். ரிஸ்னா இலங்கை இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பெண் படைப்பாளியாவார்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.

கவிதைகளின் உள்ளடக்கங்களைப் பார்க்கின்ற போது காதல், சோகம், பெண்ணியம், சமூகவியல், சர்வதேசம் என பரந்துபட்டுச் செல்வது மட்டுமன்றி எழுத்துக்களின் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கம் இவரது கவிதைகளில் நிறையக் காணப்படுவதால் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

''பெரிய புள்ள'' (பக்கம் 27) எனும் கவிதையில் சிறு வயது ஞாபகங்களை மீட்டிச் செல்கின்றார். பசுமையான நினைவுகள் காலம் கடந்தும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கும். இக்கவிதையை வாசிக்கும் வாசகனும் தன் பால்ய வயது ஞாபகங்களை அசைபோட்டுப் பார்ப்பான் என்பது நிச்சயம்.

கெணத்தடியில்
தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி
பெத்தாவும் பிடிச்சது..
பேரக்கா வித்த காசில
பால்டொபி சாப்பிட்டது..

போறவார பஸ்ஸூக்கெல்லாம்
'கெட்டம்பொல்'
அடிச்சி மாட்டியது..
பிரேமய்யா கடயில கெழங்கெடுத்து..
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது..

மலையக மக்களின் துயரம் வார்த்தைகளுக்கும் வடிக்க இயலாதது. பரம்பரை பரம்பரையாக கொழுந்து பறித்து ஜீவிக்கும் அவர்களின் உழைப்பு நாட்டின் அந்நிய செலாவணியில் அதிக தாக்கம் செலுத்துவதாகும். மழை, வெயில் பாராமல், அட்டை கடியிலிருந்து மீளாமல் தேயிலை பறிக்கும் அம்மக்களின் துயர் சூழ்ந்த வாழ்க்கை ''மலை நாட்டிலும் சுனாமிங்க'' (பக்கம் 31) என்ற இக்கவிதையினூடே நன்கு தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேகத்தை வருத்தி
தேயில பறித்தாலும் அதற்குரிய
பாகத்தை கேட்கையில
பலி பாவம் எமக்காகும்!

மாவு வெல அரிசி வெல
எகிறிக்கிட்டே போவுதுங்க..
காவு கொள்ளும் வறுமையை
எதிர்த்திடுதல் எப்படிங்க?

''சிறகொடிந்த பறவையின் பாடல்'' (பக்கம் 51) எனும் கவிதை குறியீட்டுக் கவிதையாக எழுதப்பட்டிருக்கும் பாங்கு சிறப்பானது. துயரத்தை வெளிப்படுத்தும் உத்திகளில் படிமங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. ஷஎதுவுமே இல்லை| என்று கூறாமல் ஷகைகளை வெறுமை அணைக்கிறது| என்ற வரிகளினூடே கவிஞரின் நேர்மறை எண்ணம் வெளிப்படும் பாங்கு ரசிக்கத்தக்கது

காலை நேர நிலவாய்
என் வாழ் நாள் கழிகிறது
ஐயறிவு ஜீவன் கொண்ட
உரிமை கூட இன்றி நான்
என் தலை தன்னில் அரைக்கப்படும்
மிளகாயின் காரங்கள்
மகா கொடுமை!

என் நெஞ்சாங்கூட்டுக்குள்
தடவித் தடவி
எதையோ தேடுகிறேன்..
என் கைகளை
அணைப்பதென்னவோ
வெறுமைதான்!!!

''உடன்பாடுகள்'' (பக்கம் 63) எனும் கவிதை  காதலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எதிர்காலக் கனவுகளில் லயித்திருக்கும் காதலியின் வண்ணக் கனவுகளாய் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.

நான் உன்னுடையவளாய்ப் போகும்
நாளை எண்ணியே
இதயம் பலமிழந்து விட்டது
வருடங்கள் காத்திருக்க
தெரிந்த எனக்கு
நாளிகைகளை சமாளிப்பது
காயங்கள் தோறும்
உப்பால் கழுவுவதைப் போலிருக்கிறது!

மொத்தத்தில் மிகச் சிறந்த கவிதைகளின் உள்ளடக்கமாக இந்நூல் விளங்குகிறது. அநேக கவிதைகள் படிப்பினை தரும் கவிதைகளாகக் காணப்படுவதுடன் அழகியல் கவிதைகளும் இத்தொகுதியில் காணப்படுவது சிறப்பம்சமாகும். கவிதாயினி எச்.எப். ரிஸ்னா தனது கவி உலகப் பாதையில் வெற்றி பெற்றுள்ளார் என்று துணிந்து கூறலாம். அவருக்கு நல் வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - மழையில் நனையும் மனசு
வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம் 
விலை - 400 ரூபாய்

No comments:

Post a Comment