Sunday, December 4, 2016

02. எச்.எப். ரிஸ்னா அவர்களின் 'மெல்லிசை தூறல்கள்' - தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)

எச்.எப். ரிஸ்னா அவர்களின் 'மெல்லிசை தூறல்கள்'

தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)


இசையில் மயங்காத இதயமுண்டாவென்றால் இல்லையென்று கூறுமளவுக்கு நாம் இசையோடு பின்னிப்பிணைந்து வாழ்தல் பணி செய்கின்றோம். அதிலும் மெல்லிசை கீதங்களில் ஊடுருவி இதயம் மகிழாதார் எவருமிலர்.

எம்மை கவர்ந்த பாடல்களின் வரிகளை நாம் சுவைத்து அசைபோட்டு அநுபவிக்கும் சுகத்தினை பொதுவாக நம்மில் அனைவருமே பெற்றிருப்பதோடு காதல் வரிகள் எல்லா தரப்பினரையும் ஒருகணம் தட்டிப்பார்த்தே செல்லும்.

கவிதை சிறுகதை விமர்சனம் சிறுவர் இலக்கியமென பல தளங்களில் வெற்றிவாகை சூடிய கவிதாயினி எச்.எப். ரிஸ்னா அவர்கள் சிறந்த பாடலாசிரியராக வெளிப்பட்டுள்ளமை வியக்கச்செய்கின்றது.

'மெல்லிசை தூறல்கள்" என்ற பாடல் நூல் மூலமாக மேற்கூறிய இதய சுகங்களை எம் சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்விளம் படைப்பாளியை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். ஏலவே எட்டு நூல்களை பிரசவித்த இவர், தனது 9வது நூலை வித்தியாசமான ஓர் திறமையின் மூலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக எந்த ஒரு பாடலாசிரியரும் இசையை உள்வாங்கிய பின்னரே வரிகளமைக்கும் வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். ஆனால் ரிஸ்னா அவர்கள் தன் இதயத்தில் சுழலும் இசை ஞானத்தைக்கொண்டும் கவிப்புலமையினைக் கொண்டும் பாடலாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

சமூகம் காதலென சகல பக்கங்களையும் தொட்டுக்காட்டும் வரிகளில் சுவையமுது வழிந்தோடுகின்றது. 36 பாடல்களில் "பாதைகள் புதிது" எனும் பாடல் இசையமைப்பாளரும் பாடகருமான ஜ‌னாப் டோனி ஹ‌சன் அவர்களால் 2011ல் இசையமைத்து ஹஜ் பெருநாளன்று பாடப்பட்டுள்ளது  . "மக்காவில் பிறந்த மாணிக்கமே" எனும் பாடல் பாடகரும் இசையமைப்பாளருமான கலைக்கமால் அவர்களால் 2014ல் இசையமைத்து பாடப்பட்டது. இதுபோல இவரது அனைத்து பாடல்களும் இசைவடிவம் பெற்று ரசிகர்களை நனைக்க வேண்டுமென்பது எனது பிரார்த்தனை.

'அன்பை அள்ளிப் பொழியும்' என்ற முதல் பாடல் வரிகளில் அல்லாவை வாழ்த்தும் வரிகளாகவும் அதன்பின்னால் அனைத்தையும் அலசும் பாடல்களாகவும் அமைந்திருக்கின்றன.

"அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணிதரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணிவிடும்'

இளம் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுக்கும் இவரின் பல கவிதைகள் பிரயோசனம் நிறைந்த கருத்துக்களாக, சமூக அக்கறை சமூக நேசன் கொண்ட இவரின் உள்ளக்கிடக்கைகள் சமூகத்துக்கு அதிகம் கடமைப்பட்டதாக வெளிப்படுகின்றது. தன் எழுத்துக்களால் அக்கடமையினை செவ்வனே செய்துமுடித்திருக்கின்றார்.


இந்திய பாடல்களின் மாயைக்குள் மூழ்கிப்போயிருக்கும் இலங்கையின் ரசனைக்கண்கள் சும்மாவேனும் எம் படைப்புக்களை திரும்பிப் பார்க்காதிருப்பது வேதனைதான். இதனை நூலாசிரியரும் தனதுரையில் கூறியுள்ளார். இந்திய பாடல்களுக்கு எவ்வகையிலும் தரத்திலும் சரி கனதியிலும் சரி குறைவுபடாமல் ரசனைப்பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ள இந்நூலின் பாடல்கள் அனைத்தும் இசையமைத்து பாடப்படுமாயின் இசைப்பிரியர்களுக்கு சிறந்த வரமாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் இசையமைப்பாளர்களே இது உங்கள் கடமைகளிலும் ஒன்றே என்பதனையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்

இவரின் அனைத்து இலக்கிய பணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல வெற்றிப்படிகளை எட்டவேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு நிறைவுசெய்கின்றேன்.


நூலின் வகை:- பாடல் தொகுப்பு
நூலின் பெயர்:- மெல்லிசைத் தூறல்கள்
நூலாசிரியர்:- எச்.எப்.ரிஸ்னா
விலை:- 300/=
தொடர்புகளுக்கு:- 0775009222, 0719200580
மின்னஞ்சல்:- riznahalal@gmail.com


01. மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட  எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.

இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.

மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.  இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.

மெல்லிசைத் தூறல்கள் என்னும் இந்த நூல், மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. இத்தொகுதியில் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நோக்குகளையும், போக்குகளையும் கொண்டவையாக அவை விளங்குகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், இலங்கையின் இன ஒற்றுமை, காதல்,  அறிவுரை, தனிமனித உணர்வுகள் முதலான பல்வேறு விடயங்கள் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கணிசமானவை அகநிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக உள்ளன'' என்கின்றார்.

மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள கண்டி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ரதி தேவ சுந்தரம் அவர்கள் ``உலகின் எல்லா மொழி வடிவங்களிலும் மிகப் பழமையானது கவிதை (செய்யுள்). இவை அறிவின் அறைகூவல்கள். சிந்தனையின் சாகசங்கள். கற்பனையின் சுவடுகள். வாழ்வின் வசந்தங்கள். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் என்ற தொகுதி இந்த வசந்தத்தை எமக்கு வழங்குகின்றன. இதில் முப்பத்தாறு தூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இஸ்லாம்  மதத்தோடு தொடர்புடையதாய் சில தூறல்கள், இளமையின் துள்ளலாய் சில தூறல்கள், படிக்குந் தோறும் இதயத்தை இனிமையாக்கி குளிர்விக்கும் தூறல்கள் என இவை அமைந்துள்ளன.

பல இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எச்.எப். ரிஸ்னா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். உள்நாட்டில் வெளிவந்த தொகுப்புக்களில் மட்டுமல்லாது இந்தியாவில் வெளிவந்த மழையில் கரைகிறது மானம் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் தனது கதையைப் பதித்தவர். அத்துடன் ஊடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருபவர். இவர், பல அமைப்புக்கள் மூலம் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை, பாடல் போட்டிகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில்  பணிபுரியும் ரிஸ்னா, இறைவனால் வழங்கப்பட்ட பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பது அவரது இலக்கிய செயற்பாடுகளை நோக்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. வாழ்க்கையின் போராட்டத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் எம் மத்தியில், புதிய சிந்தனைகளைத் துளிர்விடச் செய்து மெல்லிசைத் தூறல்களை அகிலமெங்கும் பொழியச் செய்யும் ரிஸ்னாவின் முயற்சி பாராட்டுக்குரியது. கௌரவத்துக்குரியது'' என்று ரிஸ்னாவின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

இசை என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்காதவர்கள் யாரும் இல்லை. இசை என்பது உள்ளங்களை ஈர்த்தெடுக்கும் ஒரு பலமான சக்தி. இசையுடன் கூடிய பாடல்கள் ரசனை உள்ளங்களை தன்பால் ஈர்த்துக்கொள்கின்றன. பாடல் வரிகளில் ஓசை நயமும், சந்தமும், எதுகை மோனையும் ஒரு சேர பயன்படுத்தப்படும்போது அது வாசிப்பதற்கும் இனிமையாக இருக்கின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் வாசிப்போரை வசீகரிக்கும் என்பது திண்ணம். இதில் காணப்படும் ஆன்மீகப் பாடல்களாக அன்பை அள்ளிப் பொழியும், இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே, மக்காவில் பிறந்த மாணிக்கமே போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடல் நேத்ரா தொலைக் காட்சியில் ஜனாப் டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளது. அதேபோல மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக் கமல் அவர்களால் இசையமைத்து பாடப்பட்டு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது.

நூலில் உள்ள பாடல்கள் பல்லவி, சரணம் 1, சரணம் 2 என்று வகுக்கப்பட்டு பாடல் எழுதுவதற்கான உரிய முறையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.

முதலாவது பாடல் அன்பை அள்ளிப் பொழியும் இதயம் நிறைந்த அல்லாஹ்வே (பக்கம் 19) என்று இறைவன் பற்றிப் பாடியுள்ளார். இறைவனின் பேரருள் கிடைக்காவிட்டால் எமது வாழ்க்கையில் எந்தவித அர்த்தமும் கிடையாது. நாம் இம்மை வாழ்வில் செய்கின்ற நன்மைகள்தான் எமது மறுமை வாழ்வை அழகாக மாற்றுகின்றது. அதற்கு இறைவன் கற்றுத் தந்தவற்றை அணுவளவும் பிசகாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு உணவு தந்து, உடை, தந்து, நல் பெற்றோரைத் தந்து எம்மை சமூகத்தில் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருக்கின்றான் என்றால் நாம் அவனுக்கு எவ்வளவு நன்றியுடையோராக இருக்க வேண்டும்? இத்தகைய இறைவன் பற்றிய இந்தப் பாடல் மனதுக்கு நிம்மதியளிக்கின்றது.

அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை

காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...

வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே

பாதைகள் புதிது என்ற பாடல் ஏழை - பணக்காரன் வாழ்வை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் ஜீவ மரணப் போராட்டம் பசி. இருப்பவனுக்கு ஒருநாள் என்பது சாதாரணம். இல்லாதவனுக்கு  மூன்று வேளை உணவு கிடைக்குமா என்ற சதா ரணம். இருப்பவனுக்கு கேளிக்கையில் நாள் கழியும். இல்லாதவனுக்கு நம்பிக்கை மாத்திரமே மூலதனம். பாடல் வரிகள் தத்ரூபமாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.

பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது

வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது

இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்

வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்

மக்காவில் பிறந்த மாணிக்கமே (பக்கம் 24) என்ற பாடல் நபி பெருமானின் புகழ்பாடி நிற்கின்றது. அல்லாஹ் மிகவும் நேசிக்கும் மனிதப் புனிதரான நபியவர்கள் பற்றி நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே...

துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..

பாடலாசிரியர் ரிஸ்னா பெற்றோருக்கு சமர்ப்பணமாக தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட (பக்கம் 26) என்ற பாடலை எழுதியிருக்கின்றார். ஒருவர் சிறந்தவராக மாறுவதும், தீயவராக ஆவதும் பெற்றோரின் கைகளில் தங்கியுள்ளது. பெற்றோர்கள் இன்றி வளரும் குழந்தைகள் தான்தோன்றித் தனமாகச் செயற்படுவது நாமறிந்த விடயம். அவ்வாறில்லாமல் பக்குவமாகவும், பாசமாகவும் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் வாய்க்கப் பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள் அத்தகைய பெற்றோருக்காக இவ்வாறான வரிகளால் பிரார்த்திக்கின்றார் நூலாசிரியர்.

கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது

பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே

ஒருவனுக்கு நாட்டுப்பற்று இல்லாவிட்டால் அவன் வாழ்வதற்கே தகுதியற்றவன். தாயும் தாய் நாடும் இரு கண்கள் போன்றவை. தான் கொண்டுள்ள நாட்டுப் பற்று காரணமாக யுத்தம் நிகழ்ந்த இந்நாட்டைப் பார்த்து இந்த தேசம் நம் தேசம் (பக்கம் 77) என்ற பாடலை யாத்துள்ளார். இந்தப் பாடல் இன ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் வரிகள் சில

குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது

ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்

இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ரசனை ததும்பும் காதல் பாடல்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. அந்த வகையில் ஓ மேகமே ஓ மேகமே, பொன்மாலைப் பொழுதொன்றில், மாங்குருவி போல் வந்து, வானவில்லின் நிறங்கள், வானம் உடைந்து, வாலிபத் தென்றலாய் வந்து, பொல்லாத காதல் என்னை, கிளை விரித்த உன் நெஞ்சில், உயிருக்குள் நீ பாதி, தேன் ஊறும் உன் கன்னம், இதயம் இப்படி வலிக்கவில்லை, மழையில் நனைந்த சிறு புறாவாய், நிம்மதியான இந்த நிமிடங்களை, மார்புக்குள் ஒரு குடிசை செய்து, அன்பை எல்லாம், உன்னைப் பார்க்க ஓடி வந்தேன், எப்போது என் வெறுமையை, மருந்தெல்லாம் இனிக்குதடி, இந்த வாழ்க்கை, நான் தந்த மடலினை, பால்நிலா பொழியும் நேரம் ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

பொல்லாத காதல் என்னை (பக்கம் 44) என்ற பாடல் பிரிந்து போன காதல் பற்றி துயர் பாடுகின்றது. ஏகாந்த வெளியில் காதல் வலியைப் பாடும் ஒரு காட்சி இந்தப் பாடலை வாசிக்கும் போது ஏற்படுகின்றமை பாடலின் சிறப்பம்சமாகும். பாடலில் உள்ளடக்கட்ட விடயங்கள் அற்புதமாக காணப்படுகின்றன. ஓசை நயமும், வார்த்தை வீச்சும் புருவமுயர்த்தச் செய்கின்றன.

பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்

பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்

நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்

மார்புக்குள் ஒரு குடிசை செய்து (பக்கம் 69) என்ற பாடல் காதல் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பாடலில் வந்து விழுந்துள்ள சொற்கள் யாவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளன. ரசனையுடன் பாடக்கூடிய பாடலாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் சினிமாப் பாடல்களின் தரத்தில் மேலுயர்ந்து காணப்படுகின்றமை கூடுதல் சிறப்பு.

மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் மூடி வைத்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்

காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்

பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்

ஆன்மீகம், தாய்மை, பெற்றோர் பாசம், பிரிவு, காதல் சுவை போன்ற உணர்வுகள் கலந்து செய்த ரசனை மிக்க பாடல்களை எழுதியிருக்கும் ரிஸ்னா எதிர்காலத்தில் இப்பாடல்களை இசை வடிவிலும் வாசகர்களுக்காக தர வேண்டும் என்றும் அவரது முயற்சிகள் யாவும் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்!!!

நூல் - மெல்லிசைத் தூறல்கள்
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - கொடகே பதிப்பகம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com
 விலை - 300 ரூபாய்

01. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பல்துறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள்
தெரிந்தவை ஒரு பார்வை என்ற தொகுதி, ஆழ்ந்த வாசிப்பின் தேடலின் பிரதிபலனாக இலக்கிய உலகுக்கு கிடைத்ததொரு காத்திரமான - கனதியான  நூலாகும். வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ரிஸ்னாவின் இந்த நூல், நூலாசிரியரின் ஏழாவது நூல் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இதற்கு முன்னர் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் இன்னும் உன் குரல் கேட்கிறது (2012) என்ற கவிதை தொகுதியையும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வைகறை (2012) என்ற சிறுகதைத் தொகுதியையும், ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் காக்காக் குளிப்பு (2012), வீட்டிற்குள் வெளிச்சம் (2012), இதோ பஞ்சுக் காய்கள் (2012), மரத்தில் முள்ளங்கி (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இலக்கியத் துறையில் அதிக முனைப்புடன் ஈடுபாடு காட்டி கடந்த ஒரு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஈழத்தில் வெளிவரும் பல முன்னோடிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும், தொலைக்காட்சி, வானொலிகளிலும்; மட்டுல்லாமல் வலைப்பூக்கள் பலவற்றிலும் கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதிவருகிறார். அத்துடன் பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் என்பது இவரது ஆளுமையின் அடையாளமாகும்.

அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை கலாபூஷணம் மாவனல்லை மன்ஸுர் அவர்கள் எழுதியுள்ளார். கொடகே வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 248 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில், ரிஸ்னா பத்திரிகையில் எழுதி வெளிவந்த 40 நூல்கள் பற்றிய இரசனைக் குறிப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

08 கவிதை நூல்களையும், 11 சிறுகதை நூல்களையும், 06 நாவல்களையும், 09 சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களையும், 06 ஏனைய நூல்களுமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களினால் எழுதி வெளியிடப் பட்டதுமான, முக்கியமான மூத்த இலக்கியவாதிகளின் நூல்கள் உட்பட மொத்தம் 40 நூல்களை இந்த நூலில் நூலாசிரியர் திறனாய்வு செய்துள்ளார். இதில் படைப்பாளிகளின் நூல்கள், அவற்றின் தன்மை, கருத்துக்கள், படைப்பாளிகள் பற்றிய விபரங்கள், நூல் பற்றிய இரசனைப் பாங்கான குறிப்புக்கள் மிகவும் தெளிவான முறையில் நூலாசிரியரினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான நூல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுத்தரக் கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவே இந்த நூலைப் பார்க்க முடியும். ஒவ்வொரு திறனாய்வாளரும், இலக்கியவாதியும் வாங்கி வாசிப்பது மாத்திரமல்லாமல் தன்னிடம் பாதுகாத்து வைக்கவும் தகுந்த ஒரு அருமையான பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் நூல்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவும் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இந்நூல் அமைந்துள்ளது.

தான் வாசித்த புத்தகங்களில் காணப்படும் விடயங்களை ஆழமாகவும், அர்த்தபூர்வமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு வாசகரைக் கவரும். தனக்கென்ற ஒரு பாணியில் இலக்கியம் படைத்து, தெளிவான மொழிநடையில் வாசகர்களைக் கவர்வது இலக்கிய முயற்சியில் வெற்றிபெறக் காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் ரிஸ்னாவின் பயணம் அப்படியே தொடர்ந்து செல்கிறது. அலட்டல்களில்லாத எளிமையான மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கின்றமை, வாசகர்களுக்கு புத்தகத்தை சிரமமில்லாமல் வாசிக்க உதவியாய் அமைகிறது.

`இலக்கியத் திறனாய்வின் மற்றொரு பரிணாமம்' என்ற தலைப்பில் அணிந்துரை வழங்கியுள்ளார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ``இலக்கியத் திறனாய்வு என்ற பெரியதொரு படுதாவினுள் பற்பல கூறுகள் உள்ளன. இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியப் பிரகிருதிகள், தொடர்பான பிரத்தியேகப் பார்வைகள், இலக்கியக் கால கட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள், பொதுவான திறனாய்வுகள், மதிப்புரைகள், இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், காரசாரமான விமர்சனங்கள், அங்கதக் கண்டனங்கள், இரசனைப் பாங்கான திறனாய்வுகள், பொழிப்புரைகள், விபரிப்புகள், விவரணங்கள் - இவை போன்றவை திறனாய்வு (Literary Studies அல்லது Literary Critisms) என்ற பெரும் துறைக்குள் அடங்கும். பழைய இலக்கியங்களுக்கான உரையாசிரியர்களின் விளக்கக் கட்டுரைகளும் ஒரு விதத்தில் திறனாய்வுகளே.

கொழும்பைப் பொறுத்தமட்டில், மா. பாலசிங்கம், தம்பு சிவா என்ற சிவசுப்பிரமணியம், வெலிகம ரிம்ஸா முஹம்மத், வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன், செ. முருகானந்தம், கே.எஸ். சிவகுமாரன் மற்றும் பல்வேறு இடங்களில் உமா வரதராஜன், ரஞ்ச குமார், அ. யேசுராசா, சே. யோகநாதன் போன்றவர்கள் திறனாய்வில் மற்றொரு பாங்கில் திறனாய்வு சார்ந்த இரசனைக் கட்டுரைகளை எழுதி வருபவர்கள். இவர்களைவிட மார்க்;சிய, மற்றும் தலித் சார்பான விமர்சகர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் Academics எனப்படும் பல்கலைக்கழக மட்ட விமர்சகர்களாவார். இவர்களுக்கு முன்னோடியாக இலக்கிய வரலாறுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதிய க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் விளக்கினார்கள். இந்தப் பின்னணியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெலிகம ரிம்ஸா முஹம்மதும் பின்பற்றி வரும் இரசனைப்பாங்கான திறனாய்வு முறை திறனாய்வின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது'' என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இவ்வகையான விமர்சனங்களை ஏன் எழுதியுள்ளார் என்ற கேள்விக்கு நூலாசிரியரே தனதுரையில் பின்வருமாறு காரணம் கூறுகின்றார். ''சமகாலத்தில் எழுதப்படுகின்ற ஈழத்து இலக்கியவாதிகளின் நூல்களை வாசித்ததன் நிமித்தம் அவற்றைப் பற்றிய கருத்துக்களை, அந்த தொகுதிகளில் நான் சுவைத்த விடயங்களை ஏனையவர்களுக்கு சொல்ல நினைத்ததால் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வந்தேன்'' என்று குறிப்பிடுகின்றார்.

இடைவெளிவிடாது இலக்கியத் தொண்டாற்றிவரும் நூலாசிரியர், ஏழு படைப்புக்களைத் தந்து இளம் படைப்பாளிகள் மத்தியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் தனக்கென்று ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. பல்வேறுபட்ட தளங்களில் நின்று இலக்கியப் பணி புரியும் ரிஸ்னா, எதிர்வரும் காலங்களிலும் இலக்கிய உலகம் பெருமிதமடையும் வகையில் பல்துறைப் படைப்புக்களையும் வெளியிட வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 
0775009222, 0719200580
ஈமெயில் - riznahalal@gmail.com
வெளியீடு; - கொடகே பதிப்பகம்
விலை - 600 ரூபாய்

04.

04. 

03.

03.

02. 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்.

மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

ஷரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்|.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்.

ஷஅன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக்  குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்|.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

ஷபரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்|.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது ஷஎனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை|!!!

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. ஷநீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்|.

மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. ஷவிடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்|

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. ஷநான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக|.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்.

01. ஷநான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்| என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

02. ஷஉம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை|.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் - riznahalal@gmail.com
விலை - 300 ரூபாய்

01. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை - கலாபூஷணம் எம்.எம்.மன்ஸுர் - மாவனெல்ல

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம்.மன்ஸுர் - மாவனெல்ல

வைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!

ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது.

இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பிரபல படைப்பாளியும், மூத்த எழுத்தாளருமான திரு. நீர்வை பொன்னையன் அவர்கள், சகல சிறுகதை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் அழகான, பொருத்தமான, பயனுள்ள சில கருத்துக்களைக் கூறியிருப்பது பிரயோசனமானதாக இருக்கிறது. சிறுகதை இலக்கணம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அவரது கருத்துக்கள் பயன்பெறுகின்றன. பொதுவாக சிறுகதை ஒன்று ஆரம்பம், வளர்ச்சி, முதிர்வு (கிளைமேக்ஸ்) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்  என்பது பொதுவான விதி. சிறுகதைக்கு அமைப்பு என்று ஒன்று இல்லை, எப்படியும் கதை சொல்லியாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மொழி வளமும், பிரயோகமும், நடமாடும் பாத்திரப் படைப்புகளும், எதிர்பாராத திருப்பமும்தான் சிறுகதைக்கு சுருதி சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பயிற்சிச் சிறுகதையாளர்களுக்கும், பயிற்சி பெற்றுத் திகழும் சிறுகதையாளர்களுக்கும் அறிவுரைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது.

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, ஏற்கனவே தினகரன், தினக்குரல், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், ஞானம், மல்லிகை, செங்கதிர், ஜீவநதி, ஓசை போன்ற முன்னணி சஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவில் சிறியதும், பெரியதுமான 21 சிறுகதைகளில் அநேகமானவை மேற்படி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிதையாகத் தோன்றி, காப்பிய உருக்கொண்டு, உரைநடை மாற்றம் பெற்று இன்று இருக்கும் நிலைக்கு சிறுகதை இலக்கியம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், அதிலே பல ரகக் கதைகள் பல பெயர்களில் அழைக்கப்படக்கூடியதாக உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்டதாக சிறுகதை வடிவம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறியுள்ள அன்ரன் செக்கோ, எட்கார் அலன்போ, எம்.ஈ. பாற்ஸ், எரிக் சேர்விக், ஹர்தோன், கா. சிவத்தம்பி, மார்க்ஸிம் கார்க்கி, புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை விளக்கியிருக்கிறார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள்.

ரிஸ்னாவின் இந்தத் தொகுப்பில் காதல் கதைகள், முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் பல்சுவைக் கதைகள் அடங்கியுள்ளன. நூலில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் அழகன் என்ற கதை அளவில் சிறியதாக இருந்தாலும் அருமையானதொரு பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. கதையை முழுமையாகப் படித்த பின்புதான் அதனைக் காதல் கதையாக எடை போடுபவர்கள் இறுதியில் ஏமாற்றத்தைக் கண்டுகொள்வார்கள். ஏனெனில் ரசிப்பு, சிரிப்பு, தொடுகை, உரையாடல் எல்லாம் காதலுக்குச் சொந்தமான பண்புகள் போல் காணப்படுவதுதான். அதே போன்று விதி என்ற சிறுகதை தோட்டத் தொழிலாளர்களின் வருமானக் குறைவினால் தமது பெண் பிள்ளைகளை கொழும்பில் உள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கும்போது பிள்ளைகள் படும் துயரினையும், நகர வாழ்வின் தன்மைகளையும், மனித நேயமற்ற மனிதர்களின் பண்புகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

மாற்றம் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் கதையானது, தோட்ட மக்களின் வறுமை நிலையினைக் காட்டுவதோடு காலங்காலமாக அவர்கள் தேயிலைத் தோட்டத்தோடும், அழுக்கு உடைகளோடும்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, படித்து, முன்னேற வேண்டும் என்ற தைரியத்தை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. யதார்த்தமாக இருந்தாலும் கற்பனை வளம் பாத்திரப் படைப்புக்களை நன்றாக சித்தரிக்கிறது. தோட்டக்காட்டான் என்று அடைமொழி வழங்கி சித்திரா டீச்சரினால் கேவலமாக பார்க்கப்பட்ட முரளி என்ற சிறுவன் படித்து, முன்னேறி டாக்டர் பட்டம் பெற்று பிரபலம் அடைந்த பின்புதான் கைராசிக்கார டாக்டராக வந்திருக்கிறான். அதை அறியாமல் சித்திரா டீச்சர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட போதும் அது நிராசையாகிப் போனதால் அவமானம் தாங்காமல் தலைகுனிவுக்கு உள்ளாகிறார். இதனை அருமையான படிப்பினை ஊட்டும் கதை என்று சொல்லாம்.

அதே போன்று உறவுகள் என்ற கதை ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு, விபத்தில் சிக்கிய சகோதரனை தனது இரத்தத்தைக் கொடுத்து காப்பாற்றியதனால் மறைந்தது.

மேலும் தேயிலைச் செடிகளுக்கு உரமாய் உழைக்கும் அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக் கொண்டு தேயிலை சுமை சுமக்கும் அவர்கள் மீது கருணைகாட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் பதித்து போலிப் பாசம் காட்டி இறுதியில் ஏமாற்றும் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களை தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? என்ற கேள்வி மூலம் தோட்டங்களில் நிலவும் அரசியல் நிலவரம் துலாம்பரமாகிறது.

அதே வேளை தோட்டப் பாடசாலைகளில் படிக்கப் போகும் பிள்ளைகளின் நிலவரங்களையும் எடுத்துக்காட்ட கதாசிரியர் மறக்கவில்லை `காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்?' என்று மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி கதையை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

இன்று பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் நிறையப் பேர் எழுதி வந்தாலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் ஒரு சிலரே எழுதுவதைக் காண முடிகிறது. மூத்த தலைமுறை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வயது மூப்பு, குடும்பப் பிரச்சினை, நேரமின்னை போன்ற பல்வேறு காரணங்களினால் எழுதுவதிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் இளைய தலைமுறை எழுத்தாளரான எச்.எப். ரிஸ்னா தொடர்ந்தும் சமூகத்துக்காக, சமூகத்திலுள்ள பிரச்சினைகளைப் புரியவைப்பதற்காக, சமூக சீரழிவுகளை சீர் செய்வதற்காக எழுத வேண்டும். சிறுகதை எழுத்தாளராக வர ஆசைப்படுபவர்கள் இந்நூலை வாங்கிப் படிப்பதன் மூலம் சிறந்ததோர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியம். எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - வைகறை
வகை - சிறுகதை
நூலாசிரியர் - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி – 0775009222, 0719200580
விலை - 300 ரூபாய்

04. இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலுக்கான விமர்சனம் - தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)

இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலுக்கான விமர்சனம்

தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)


உள்ளம் உடைந்து உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது அணையிட்டு அடக்கமுடியாத பிரவாகமாய் பெருக்கெடுக்கும் தமிழின்பத்தை கவிதையாகக் கொள்ளலாம். அந்த உன்னத உண‌ர்வினை வார்த்தைக்கற்களால் வரிகளாக்கி வாசகர்களுக்கு விருந்தளித்துள்ளார் தியத்தலாவையை சேர்ந்த கவிதாயினி  எச்.எஃப்.ரிஸ்னா. கவிதை சிறுகதை நூல்விமர்சனம் என இலக்கியத்தில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இவரது, 'இன்னும் உன் குரல் கேடிகின்றது' கவிதை  நூலானது புரவலர் புத்தகப்பூங்கவின் 30வது வெளியீடாக வெளிவந்துள்ளது.

 வசனக்கவிதை, புதுக்கவிதையாக பூத்துநிற்கும் கவிதைகளில் ஆங்காங்கே சந்தம் சந்தோஷம் நாதம் மீட்டியுள்ளது.இலகுவான மொழிநடையில் இயல்பான விடயங்களை தொட்டிருக்கும் கவிஞர் காதல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அநேக கவிதைகளில் புலப்படுகின்றது. அத்தோடு சகலரும் வாசித்து விளங்கக்கூடிய நடையில் உணர்வினை வெளிப்படுத்தியிருக்கும் விதம் நூலுக்கு வலிமை சேர்த்திருக்கின்றது.

"நேர்மையாய் உன்
வாழ்வைவாழு பிறர்
கவலையை காது கொடுத்து கேளு
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலேஅயராது
அவருக்காய் மாளு
தரணியிலே நீவாழ்வது மேலு"

என 'நீ வாழ்வது மேல்' என்ற தலைப்பில் மிக அருமையான அறிவுரைகளை கூறி நம் அகங்களை தொடமுனைந்த கவிஞரின் சொல்லாட்சி வாழ்த்தச்செய்கின்றது.வாசிக்கும் போதே எம்மை உணர்ந்துகொள்ள‌வும் நாம் கடந்துவந்த அல்லது கடந்துகொண்டிருக்கும் நிலமைகளை மிக இலகு நடையில் சொல்லியிருப்பது சொல்லில் செதுக்கியிருப்பது ஆச்சரியம். அத்தோடு கவிஞரின் கற்பனைத்திறன் பல கவிதைகளில் பிரமிக்கச்செய்கின்றது.

"உன்
அன்பெனும் ஆலையிலே
நித்தமும் சாறுபிழியப்படும்
கரும்பல்லவா நான்
அப்படியே காதலுடன்என்னை
ருசி பார்த்து மகிழும்
எறும்பல்லவா நீ"  

என 'இதயத்தின் முகவரி' எனும் கவிதை போல பல கவிதைகளில் காதலும் கற்பனையும் ததும்பும் குவைமிக்க வரிகள் சுவைக்கவைக்கின்றன.

"உள் மனசில் நீ
உறைந்து கிடந்த போதேல்லாம்
இளகி பிரிவாய் என்று
சத்தியமாய் நினைக்கவும்
முடிந்ததா என்னால்"

'புதைகுழி நோக்கி புறப்படுகின்றேன்' என்ற கவிதை மணவறைக்கு அழைத்துசெல்லப்படும் மணப்பெண்ணின் உள்ளக்குமுறலை சொல்லியிருக்கின்றது. 'மனங்கவர் மணவாளன்' எனும் கவிதை முதிர்கன்னி களின் முகத்திரையிட்ட குமுறல்களுக்கு ஆற்றுப்படுத்தலாகவும் 'ஒரு வீணை அழுகின்றது' எனும் கவிதை மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஓர் கணவன் தன் காதல் மனைவியின் எதிர்கால விளக்கை கொளுத்தி வைக்கும் வரிகளாய் சிறப்பு புரிகின்றது.இவ்வாறு பெண்மையின் பல பக்கங்களை இலகுவாக சென்றடைந்துள்ளார் கவிஞர்.

" எரிமலையில்
பூத்துப்போன மலர்களுக்கு
வேர்களின்வேதனை
புரிவதேயில்லை"

'கறையான் பக்கங்கள்'எனும் தலைப்பில் மிக ஆழமாக சிந்தனைக்கருவை சிதறவிட்டிருக்கின்றார். கவிதைக்கு பலம் சேர்க்கும் விடயங்களில் இவ்வாறான படிமக்குறிகள் முக்கிய இடம்வகிக்கின்றது. அதனை இதுபோன்ற வரிகள் பல இடங்களில் தடம் பதித்திருக்கின்றது.

மலையக வாழ்வியலைப்பற்றியும் 'மலையக மாதுவின் மனக்குமுறல்' என்ற தலைப்பில் ஆதங்கப்பட்டிருக்கும் ஆசிரியர், ஒவ்வொரு தலைப்பிலும் மனித மனங்களில் உருண்டோடிக்கொண்டிருக்கும் உணர்வுகளை லாவகமாக பிடித்து விளக்கியுள்ளார். மனதை உருக்கும் வார்த்தை பிரயோகங்களால் சில நிதர்சனங்களை ஆணியடித்தாற்போல பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இளமை கவியால் ஆட்கொண்டிருக்கும் 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூலானது 68 தலைப்புக்களை பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால், 56 கவிதைகளே நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் குறையாக தெரியாவிட்டாலும் கவித்தேடலுக்கு ஓர் ஏமாற்றமாக இருந்தது என்பதே நிஜம்.கவிஞர் எச்.எஃப்.ரிஸ்னா, இளவயதில் சந்திக்கும் அல்லது அவ்வயதில் கடந்து வருகின்ற உணர்வலைகளுக்கு ஒளியூட்டியிருக்கின்றார் என்றே கூறவேண்டும் ஏனெனில், அவ்விளவயதின் மன உளைச்சல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புக்கள் என்ற அத்தனை பக்கங்களையும் விபரமாக வெளிப்படுத்தியுள்ள விதம் இளையவர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு மூத்தவர்களின் கடந்த கால நிஜங்களை நிழற்படமாக காட்டியுள்ளதால் சகல தரப்பினரையும் கவரும் என்பதில் எவ்வித ஐயங்களுமில்லை என்பதனை குறிப்பிட்டாக வேண்டும்.

'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை தொகுதியானது வாசகர்கள் மனதிலும் குரலாய் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பிடம் பெறுகின்றது. நூலினை பிரசவித்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை பகர்ந்துகொள்வதோடு அவரிடமிருந்து இன்னும் பல இலக்கிய படைப்புக்களை எதிர்ப்பார்க்கின்றோம்!!!

நூல்:- 'இன்னும் உன் குரல் கேட்கின்றது' கவிதை நூல்
ஆசிரியர்:- எச்.எஃப். ரிஸ்னா
தொடர்புகளுக்கு:- riznahalal@gmail.com
தொலைபேசி:- 0775009222, 0719200580
 விலை:- 180/=


http://suga-elizabeth.blogspot.com/2013/01/blog-post_4143.html



03. 'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு - கலாபூஷணம் எம்.எம்.மன்ஸுர் - மாவனெல்ல

'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

கலாபூஷணம் எம்.எம்.மன்ஸுர் - மாவனெல்ல

என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

அந்த வகையில் இளம் கவிதாயினி தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் கொழும்புத் தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இன்னும் உன் குரல் கேட்கிறது ஆம் அது ஏன் இன்னும் கேட்கிறது என்பதை அறிய ஆவலாய் நூலைக் கையில் எடுக்கும் போதே, இன்னும் ஓர் இளம் கவிதாயினியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கற்பனைத் திரத்தில் கணனிக் கைவண்ணத்தில் உருவான வானத்து தேவதையின் வண்ண முகப் பொழிவு கொண்ட முன்பக்க அட்டை கருத்தைக் கவரும் விதத்தில் உள் நுழையச் செய்வதில் விந்தை ஏதுமில்லை.

உள்ளே பூங்காவின் பதிப்புத்துறைச் செயலாளர், மூத்த எழுத்தாளர், அதிலும் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் கவிதாயினியை பூந்தமிழ் ஆசி கொண்டு பாமாலை சூட்டிச் சிறப்பித்திருக்கிறார். மூத்த கவிஞர், கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் முகப்பூ தந்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதிலே இலக்கண காலத்தே இருந்தே செய்யுள் வடிவம் இன்று திரிந்து, பிரிந்து, உருமாறி இன்றைய செல்வாக்குப் பெற்றுள்ள கவி வடிவத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதாவது ஷஷபாரதி முதல் வால்ட் விட்மன், கலீல் ஜிப்ரான், உமர் கையாம், தாகூர் போன்றவர்களின் கவிதைகளின் தாக்கம் தான் இன்றைய கவிதைகளின் உருவாக்கத்துக்குக் காரணம்|| என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கவிதாயினி தனது முன்னுரையில் தனது கவிதைகளின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவை அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோசம், மலையகம் சார்ந்த பிரச்சினைகள், சமூக அவலங்கள், சீதனக் கொடுமை, சுனாமி உணர்வுகளைத் தரக் கூடிய கருத்துக்களைப் பற்றிப் பேசுகின்றன.

கவிஞை மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதால் மலையக மக்களின் வாழ்க்கையை, அதிலும் மலையகப் பெண்களின் வாழ்வியலினை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அத்தகைய ஒரு கவிதையைப் பாருங்கள். பெண்ணை மாடாக உழைக்கவிட்டுத் தான் மட்டும் கிடைப்பதைச் சாராயக் கடையிலே கொட்டுகிற கொடுமையை வேறு எந்தச் சமூகத்தில் காண முடியும்? பெண்ணியம் பேசும் சீர்திருத்த வாதிகளே சற்றும் திரும்பிப் பாருங்கள் இக்காட்சியினை.

தூபங்களிட்டாற் போல
சாபங்கள் நீங்குறதேயில்ல!
வேர்வை வர ஒழைச்சும்
வேதனமோ பசியாற்றல்ல!
கோர்வையா வெலயேத்தம்
கோமானுக்கு இரக்கமில்ல!

இவ்வரிகளை இலகுவாக நாம் எண்ணிவிட முடியாது. யாரிட்ட சாபமோ மலையக மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கக் காணோம். வியர்வை சிந்தி எவ்வளவு தான் உழைத்தாலும் கிடைக்கின்ற வேதனம் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. நாளுக்கு நாள் விலையேற்றம். இது தோட்ட எஜமானார்களுக்கு விளங்கவில்லையா? என்று கேட்பது போல கவிவரிகளைப் போட்டு மக்கள் மனங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். அது மாத்திரமா?

தேயில சுமை முதுகில
வாழ்க்க சுமை மனசில..
புருஷன் சம்பளத்தோட
சாராயக் கடையில..

என்ற வரிகள் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. இதில் ஒரு வரி வாசகர் கருத்தில் புலப்படாமல் போகிறது. ஷஷபுருஷன் சம்பளத்தோட சாராயக் கடையில|| என்ற வரிகள் உண்மையில் மனைவியின் சம்பளத்தைப் பிடுங்கிக் கொண்டு சாராயக் கடையில் போட்டானா? அல்லது தன்னுடைய சம்பளத்தைக் கொண்டு போய் சாராயக் கடையில் கொடுத்துவிட்டு தண்ணி போட்டுக் கொண்டானா என்பது புரியவில்லை. மலையக மாதுவின் மனக் குமுறல் என்ற கவிதையில் மேற் கண்ட வரிகளைக் காணலாம்.

ஏழ்மையைப் பயன்படுத்தி ஏழைச் சிறார்களை, அதுவும் பள்ளி செல்லும் சிறார்களை வேலைக்கமர்த்தி, வேலை வாங்கும் வேலை கொள்வோரை கவிஞை இப்படிச் சாடுகிறார்.

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படிதான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

என்று தனது மனக்குமுறலை, மனித நேயத்தை, பாசத்தைக் கொட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட அவர்களை சுனாமிப் பேரலைகள் கொண்டு போகட்டும் என்று கூடச் சொல்லுகிறார். அதே போல விதி வசத்தால் விலை மாதரானாலும், பணத்துக்காக ஆசைப்பட்டு வீணாகத் தமது வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட மாதர்களைப் புயலும் மொத்தமாக அள்ளிச் செல்லட்டும் என வேண்டுகிறார்.

விதி செய்த சதியினிலே
விலைபோகும் மாதுகளை
எப்படி நாம் காப்பாற்ற இயலும்?
வெறும் பணத்துக்காய்
ஆசைப்பட்டு
வீணாகும் சிலபேரை
மொத்தமாக அள்ளி செல்லும் புயலும்!

இன்றைய நாகரிக மோகத்தில் மூழ்கி அரைகுறை ஆடை அணிகளுடன் ஆண்களை மயக்கும் பெண்களின் பங்கைப் பற்றிச் சொல்லும் போது...

ஆடைகளில் கவனமின்றி
ஆடவரைக் கவர்கிறோம்..
வாடை பூசி வெளியேறி
வாலிபரை மயக்குகிறோம்!

மாரழகு வெளித்தெரிய
மாருதம்போல் வருகிறோம்..
பேரழகு பெண் என்று
பேச்சிலும் இதம் தருகிறோம்!

அங்கங்கள் வெளித் தெரிய தன் அழகை வெளிக்காட்டும் பெண்கள், அதுதான் தமது அழகு என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற இந்த வரிகள் மூலம் நாகரீக அசிங்கங்களை விளக்குகிறார்.

இன்று நான்மறை வேதங்களின் நலமிகு கருத்துக்களை மதித்து நடக்காத மனிதன், சாத்திரங்கள், மந்திரங்களை மறந்து வாழும் மனிதன், வழி தவறிப் போவது கண்டு கவிஞை மனமுறுகுகின்றார். அது மாத்திரமல்லாமல் கணவன் தான் உயிர் நீத்ததன் பின்னர் மனைவி வெள்ளாடை தரித்து வீணாக இருந்துவிடாமல் புதுமைப் பெண்ணாய் இருந்துவிடு, அடுத்தவரின் பழிச்சொல் கேட்டு பயந்து நீ கோழையாகி விடாமல் துணைவரைத் தேடிக் கொண்டு வாழும் காலமெல்லாம் வசந்தமாய் வாழ்ந்துவிடு என்று பாரதியின் புதுமைக் கருத்துக்களைக் கூறியிருக்கின்றார் இவ்வாறு..

இன்று
வேதங்கள் நிஜமிழந்து
மந்திரங்களும்
பொய்யாகிப் போனது!

ஒருவேளை..
நான் மீளாத்துயிலில்
ஆழ்ந்து விட்டால்..
காவலனைத் தேடிக்கொள்
கட்டாயம்!

என்று உபதேசமாகக் கூறிவிட்டு, இப்படியும் புத்திமதியைச் சொல்லி வைக்கிறார்.

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

என்பதோடு பலி சொல்லும் உலகுக்கு பயந்து நீ சாகாதே என்று அறிவுரையும் கூறுகின்றார்.

ஆணின் நிலையிலிருந்து அனுபவக் கருத்துக்களை அள்ளி வழங்கியிருக்கும் கவிதாயினி, பெண்ணியத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார் தனது கவிதையினூடே. ஒரு பெண்ணினால் ஏமாற்றப்பட்ட ஓர் ஆணின் உள்ளக் குமுறலை மாத்திரமல்லாமல் மனவேதனையையும் இப்படிக் கூறுகின்றார்.

அன்பென்று நடித்தவர்கள்
பாதியிலே மாறினார்கள்..
வாள்முனை வார்த்தைகளால்
இதயத்தைக் கீறினார்கள்!

தாலி நீ ஏற்று விட்டாய்
தாயாகவும் மாறி விட்டாய்..
தாடியுடன் அலையும் நான் - இனி
தாரம் தேடப் போவதில்லை!!!

இறைவன் யாருக்கு யார் என்பதை என்றோ எழுதிவிட்டான். அதன்படி தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணைவியோ, துணைவனோ அமைவதுண்டு. அதனால் அதைப்பற்றி எண்ணிக் கவலைப் படாதே என்று அறிவுரையாய்ச் சொல்லும் கருத்துக்கள் இவை.

கலங்காதே காரிகையே..
காதலுடன் உனை காப்பாற்ற
காளை ஒருவன்
வராமலா இருக்கப் போகிறான்?

யாருக்கு யார் என்று
வல்லவன் என்றோ
எழுதிவிட்டானே அன்று?

தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகளில் அனேகமானவை தன்னிலையை முன்னிலைப் படுத்தித் தான் எழுதப்படுகின்றன. அதிலும் அனேகமானவை காதல் கவிதைகள் தான். காதல் கவிதைகள் எழுதுவதற்கு அது ஒரு கருவியாக இன்று காணப்படுகின்றது. இந்த வகைக் கவிதைகள் மூலம் அது நிரூபணமாகின்றது. நூலில் அநேகமானவை காதல் கவிதைகளாக இருந்த போதிலும் பல் பொருள் பேசும் கவிதைகளும் காணப்படுவது சிறப்பம்சமாகும். மலையகத்தைப் பற்றிப் பாடியுள்ள கவிதைகள் யாவும் மலையக வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு முக்கிய ஒரு காரணம் கவிஞை மலை நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது தான். ஏனெனில் அவர் மலையக வாழ்க்கையை நன்கு அறிந்து தெரிந்து அனுபவ ரீதியாகப் பெற்ற அனுபவங்களைத் தனது கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

இன்பமின்றி வேறு இனி ஏது? என்ற கவிதையில் காணப்படும் சில வரிகள் என்னை மாத்திரமல்ல வாசகர்கள் அனைவரையும் கவரும் என எண்ணுகிறேன்.

அருவிக்கு போகையிலே
ஆத்தங்கரை ஓரத்திலே
குடத்துடனே நீயுந்தான் இருந்தாய்..
குயிலே - குடத்தைப் போல
என் உள்ளம்
தளும்பித் தளும்பித் துடிக்கையிலே
குருவியாக நீ பறந்து சென்றாய்!

இக்கவி வரிகளைப் படிக்கும் போது எனக்கு கிழக்கிலங்கை கிராமியப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பாடலையும் ரிஸ்னாவின் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிலும் என்ன வித்தியாசம் காணப்படுகிறது, எத்தகைய உணர்வினைப் பெற முடிகிறது என்பதை. இதோ பாடல்..

தண்ணிக் குடம் எடுத்து  
தனி வழியே போகும் பெண்ணே!
தண்ணிக் குடத்துள்ளே
தளும்புதடி என் மனசு!

இதே கருத்தை உள்ளடக்கியதாக கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றும் என் நினைவுக்கு வருகிறது. இதோ:-

தண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணம்மா
தாகத்துக்கு தண்ணி தந்தால் என்னம்மா?

என்று தலைவன் கேட்க,

தண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணய்யா
கண்டவங்க தாகத்துக்கு இல்லையா

இது தலைவி மறுப்பதாக அமைந்துள்ளது. இப்படியாகப் பல ரசனைகள்; நிறைந்ததாக ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதி அமைந்திருக்கிறது. நூலில் அநேகம் காதல் கவிதைகளாக இருப்பதால் காதலர்களுக்குத் தேனாக இனிக்கும். மட்டுல்லாமல் வேறு பல்வகைப் பொருட்களிலும் கவிதைகள் இடம்பிடித்திருப்பதால் இத்தொகுதி சிறப்பு பெறுகிறது. என்றாலும் ஒரு குறை. உள்ளடக்கத்தில் 68 கவிதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தாலும் கூட நூலில் இடம் பெற்றிருப்பதோ 56 கவிதைகள் மாத்திரமே. தவறுக்கு யார் காரணமோ???

நூலின் பெயர் - இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதைகள்)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
முகவரி – 21 E, Sri Dharmspala Raod, Mount Lavinia.
தொலைபேசி - 
0775009222, 0719200580
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 180/=

02. தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி - மொழிவரதன்

தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி

மொழிவரதன்

புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.

அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. வானத்தில் உலாவும் ஒரு தேவதையின் தோற்றமும், பறக்கும் அவளது மெல்லிய ஆடை, சிறகுகள் எல்லாம் வண்ணத்தால் மிளிர்கின்றன. ஊதா நிறத்திலான பின்னணி நிறமும், அதன் கீழே இளம் பச்சை நிறமும் கண்ணுக்கு இதமாக உள்ளன எனலாம். பின் அட்டை நூலாசிரியரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படத்துடன் அவரைப் பற்றிய குறிப்புக்களையும் தாங்கி வந்துள்ளது. இவைகளை கணனியில் வடிவமைத்து மெருகூட்டிய வெலிகம ரிம்ஸா முஹம்மத் பாராட்டுக்குரியவர்.

புரவலர் புத்தகப் பூங்காவின் பொதுச் செயலாளர் எஸ்.ஐ. நாகூர்கனியின் ஆசிச் செய்தியுடனும், கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் அணிந்துரையுடனும் நூல் வெளிவந்துள்ளது. என் இதயத்திலிருந்து என்ற தலைப்பில் நூலாசிரியர் எச்.எப். ரிஸ்னா தனது உள்ளக் கருத்துக்களை கூறிச் செல்கிறார். ஓர் ஆரம்பக் கவிஞருக்குரிய அடக்கம் அதில் இழையோடுகிறது.

“இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி 56 கவிதைகளைத் தாங்கியுள்ளது. பெருமளவில் எல்லாமே ஒரு பக்கத்தில் அமைந்த கவிதைகள்தான். நீண்ட கவிதைகள் காணப்படவில்லை. கவிதைத் தலைப்புக்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளமையும், கவிதை உள்ளடக்கங்கள் யாவும் ஒரே அளவிலான எழுத்துக்களால் அச்சிடப்பட்டுள்ளமையும் நூலுக்கு ஒரு நேர்த்தியைத் தந்துள்ளது. ஓரிரு படங்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும், பெருமளவில் சித்திரங்கள் காணப்படவில்லை.

நூலை வாங்க வேண்டும், எடுத்து வாசிக்க வேண்டும் எனும் ஆவலை நூலின் அமைப்பு தூண்டுகிறது எனில் தவறில்லை. ஓர் இளம் பெண்ணுக்கு அல்லது தாய்க்கு முதல் பிரசவம் போல் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு இந்தக் கவிதைத் தொகுதி தலைப் பிரசவம். எனவே ஒரு பதற்றமும், வலியும் நிச்சயம் அந்த பிரசவத்திலிருந்தே ஆதல் வேண்டும். ஆனால் எச்.எப். ரிஸ்னாவுக்கு இது நிறைவான பிரசவமே தவிர குறைப் பிரசவம் அன்று. எவ்வாறெனினும் அவரது வயது, அனுபவம், தேடல், பயிற்சி போன்ற இன்னோரன்ன விடயங்கள் அவரது கவிதைகளின் கருக்களுக்கு பின்புலமாகியுள்ளன என்று துணிந்து கூறலாம். குறித்த அவரது வயதில் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதும் அவரது கற்பனை ஓட்டமும், கவிதைப் பார்வை என்பனவும் வெளிப்படுகின்றன.

காதல், தோல்வி, விரக்தி, சோகம், ஏமாற்றம் தவிர்த்த பதினான்கு கவிதைகள் வேறுபட்டு இந்தத் தொகுதியில் வெளிப்பட்டுள்ளன. அவை நீ வாழ்வது மேல் (பக்கம் 13), உம்மாவுக்கு (பக்கம் 17), தீன் வழியைக் காட்டி நில் (பக்கம் 26), திருந்திய உள்ளம் (பக்கம் 28), ஒரு வீணை அழுகிறது (பக்கம் 30), மலையக மாதுவின் மனக்குமுறல் (பக்கம் 53), சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன (பக்கம் 57), மனித நேயம் (பக்கம் 58), பூமி திணணும் பூதம் பற்றி (பக்கம் 59), கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 60), உணர்வுப் பிரிக்கை (பக்கம் 61); போன்ற கவிதைகளும் இவரது கவிதைத் தொகுதியில் காணப்படுகின்ற வித்தியாசமான கருக்களைக் கொண்ட கவிதைகளாக மிகவும் சிறப்பாக மலர்ந்துள்ளன. இவை தவிர ஏனைய பெரும்பாலான கவிதைகள் கிட்டத்தட்ட ஒரே வகையான மனக்குமுறல்களின் வெளிப்பாடாகவே மலர்ந்துள்ளன. எனினும் அவை வெவ்வேறு கோணங்களிலிருந்து புறப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

ஊம்மாவுக்கு என்ற கவிதை சின்ன வயது செல்லங்களையும், அனுபவங்களையும் கூறுகிறது. ஒரு வீணை அழுகிறது கவிதையில் நம்பிக்கை தரும் நல் வரிகள் வந்துள்ளன.

“ஒருவேளை
நான் மீளாத்துயிலில்
ஆழ்ந்துவிட்டால்…
காவலனைத் தேடிக்கொள்
கட்டாயம்
………….
வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே
வாழும்வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே…”

பழைமையை சாடும் போக்கு மேற்குறித்த கவிதையிலே தென்படுகின்றது. எலும்புக் கூடுகளும் இரத்தம் நிறம்பிய குவளைகளும் கவிதை படிமங்கள் நிறைந்த கவிதையாக உள்ளது எனலாம். இதே போன்றே உணர்வுப் பிரிக்கை கவிதை பல விடயங்களை கூறிச் செல்லுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை அது வெளிப்படுத்துகிறது. அது போல பூமி திண்ணும் பூதம்பற்றி… எனும் கவிதையும் ஆகும்.

எழுதும் ஆற்றல், கவிபுனையும் வல்லமை, கற்பனை, குறியீட்டுத் தன்மை, படிமம் போன்றன இவரது கவிதைகளில் பொதிந்துள்ளன. இளம் படைப்பாளிகளின் இவ்வரவை வரவேற்கும் கவிதை உலகம் அவரிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறது. நம்பிக்கை வரட்சியை விரட்டி புதிய இளம் சந்ததியினருக்கு காதலுக்கு அப்பாலும் பரந்து விரிந்து பல்துறைகளாக கிடக்கின்றது என்ற தத்துவார்த்த சிந்தனையைத் தொட்டெழுதிட வாழ்த்துக்கூறி நிற்கின்றது. இறுதியாக புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களுக்கு தரமான இந்தக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுக் கொடுத்ததற்காக நன்றி கூறுகிறேன். அவரது பணி தொடர வேண்டுகின்றேன்!!!

நூலின் பெயர் – இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதைகள்)
நூலாசிரியர் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி – 
0775009222, 0719200580
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
விலை – 180/=

01. இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உதட்டில் ஒன்றோடும்
உள்ளத்தில் வேறொன்றோடும்
புரட்டுக்கள் புரியாத
புனித மனம் கொண்டோருக்கு

இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.

கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் தனது ஆசியுரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

மலையக மண்ணின் மங்கை - கவிஞை
செல்வி எச்.எப். ரிஸ்னா என்பா(ள்)ர்
நிலையிலா உலகில் தன் பெயர் நிலைத்திட
நெஞ்சமர் கவிதை நிறையவே தந்தார்.

திறந்த கதவுள் தெரிந்தவை என்ற தலைப்பிட்டு கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் தனது அணிந்துரையில் `ஒப்பீடு, குறியீடு இவ்விரு முறைகளிலும் குறியீடுதான் கருத்தை செம்மையாக வெளிப்படுத்தும். இப் படிமம் வாசகனை உணரவைக்கும். இக்கருத்தை இத்தொகுதியில் அதிகம் காணலாம். ரிஸ்னாவின் கவிதைகளில் கற்பனை, புதிய பார்வை, பாதிப்பு மூன்றும் கலந்துள்ளன' என்கிறார்.

நீ வாழ்வது மேல் (பக்கம் 13) என்ற கவிதை போலி முகம் காட்டிப் பழகும் மனிதர்களுக்கு சாட்டையடியாக விழுந்திருக்கிறது. தன்னை நல்லவன் என்று காட்டிக்கொண்டும், தனக்கு உதவியவர்களை மறந்தும் வாழும் பலருக்கு இக்கவிதை பொருத்தமான அறிவுரையைப் பகிர்ந்து நிற்கிறது. நாம் பழகும், அல்லது பழகிய பலரில் நமக்குத் தெரியாமலேயே பொறாமைக் குணம்கொண்டு குழி வெட்டுபவர்கள் இருக்கின்றார்கள். அத்தகையவர்களை கண்டாலே விலக வேண்டும் என்கிறார் கவிஞர்.

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக் காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு..
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!

கற்பு என்பது ஆண் வர்க்கத்துக்கும், பெண் வர்க்கத்துக்கும் பொதுவானது. ஆனால் பெண்கள் சருக்கினால் சரித்திரம், ஆண்கள் சறுக்கினால் சம்பவம் என்று கணித்து வைத்திருக்கிறது இந்த குருட்டு சமூகம். எதுவென்றாலும் உத்தமமானவர்கள் ஆண்களிலும் இருக்கிறார்கள். பெண்களிலும் இருக்கிறார்கள். அத்தகைய தூய மனம் கொண்ட ஒரு ஆணின் மனது மழை ப்ரியம் (பக்கம் 16) என்ற கவிதையில் இவ்வாறு திறந்திருக்கிறது.

நகம் கூட உனைத் தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை..
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

பெற்றோரை, குடும்பத்தினரை, சொந்த ஊரை எல்லாம் விட்டு இன்று தலை நகரில் வந்து தமக்கான அடையாளத்தை பலர் பதிய வைக்கின்றார்கள். அவ்வாறு தனது ஆளுமையை பதிய முனையும் பலபேர்களில் கவிஞரும் ஒருவர் என்பது இக்கவிதையினூடே புலப்படுகின்றது. உம்மாவுக்கு (பக்கம் 17)

உம்மா!
பிடிக்கவில்லை..
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும்
இந்தக் காலங்கள்!

................
என் வாழ்க்கையின்
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்..
அதுவரை கொஞ்சம்
பொறுத்திருங்கள்..
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!

ஒரு பெண் சுமங்கலியாய் வாழும்போது வாழ்த்தும் பலபேர் அவள் அமங்கலியாகிவிட்ட பின்பு திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற இடத்துக்கும் அண்ட விடுவதில்லை. சபிக்கப்பட்டவர்கள் போன்று அவர்களை ஒதுக்கி விடுகின்றார்கள்.

தனது துணைவிக்கு அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் மரண அவஸ்தையிலிருக்கும் அன்புக் கணவனின் வேண்டுகோளாக ஒரு வீPணை அழுகிறது (பக்கம் 30) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய காலத்தில் விதவைகள் மறுமணம் புரிவது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும்.

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகளில் பல, சந்தக் கவிதையாக எழுதப்பட்டிருப்பவை. இது அவரது தனித்துவ அடையாளமாகும். ஓசை நயமும், சந்தமும் இணைந்து எழுதப்படும் கவிஞரின் எல்லா கவிதைகளும் தங்கு தடையின்றி எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. முதல் முறை வாசிக்கும்போதே மனதைத் தொட்டுவிடும் வல்லமை ரிஸ்னாவின் கவிதைகளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு கவிதையின் சில வரிகள் இதோ... (மரணத்தின் தேதி - பக்கம் 45)

இத்தனை நாள்
பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு
என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

கவிதைத் தொகுதியின் மகுடக் கவிதையாக விளங்கும் இன்னும் உன் குரல் கேட்கிறது (பக்கம் 60) என்ற கவிதை  ஓர் ஆத்மாவின் தேடலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கவிதையின் கருத்துக்களில் சொட்டும் ஈரம் மனதிலும் கசிந்துவிடுகிறது. இதோ சில வரிகள்...

`நீ தான் என் எல்லாமே'
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!

குயிலே!
உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய்
கேட்டுக்கிட்டிருக்கு!

மனசாட்சி இல்லாமல், அல்லது சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நம் கண்முன் தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான சில விடயங்களைத் தொட்டுக்காட்டி கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 66) எனும் கவிதை எழுதப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படித்தான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

`பூ மலர்வது, பொழுது புலர்வது... இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன' என்று தனதுரையில் கூறியிருக்கும் நூலாசிரியர் கவிதைகளில் அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோஷம், மலையகம் சார் பிரச்சினைகள், சமூக அவலம், சீதனக்கொடுமை, சுனாமி போன்ற உணர்வுகளும் கலந்திருக்கின்றன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
தொலைபேசி - 
0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com
விலை - 180 ரூபாய்